Friday, May 15, 2009

+2 தேர்வில் தோற்ற மாணவர்களுக்கு...

நீர் கீழே வீழ்வதை அருவி என்றும் ‘நீர்வீழ்ச்சி’ என்றும் சொல்கிறோம். அதே நீர்தான் மேலே இருந்துதான் விழுகிறது, என்றாலும் ‘மழை’ என்றும் அழைக்கிறோம். ஏன் என்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா தம்பிகளே? அது போலத்தான் சில நிகழ்வுகள் அதனதன் அளவில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.வரும். தேர்வும், அதில் தோல்வி என்று சொல்லப்படும் வார்த்தைகளும் அந்த அளவே...

மெக்காலே கல்வித்திட்டத்தின் மிச்ச எச்சமே இந்த எழவெடுத்த தேர்வுமுறை. வெற்றி பெற்றவர்கள் மட்டுமே கொண்டாடப்படுவதால் தோல்வியின் வலி தோற்றவனுக்குள் புதைந்து போகிறது. போகட்டும். தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது.

தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளும் வெற்றியும் கொண்டாப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அதற்கு முன் அவர் தோற்ற அத்தனை முயற்சிகளையும் மறந்துவிட்டே இருக்கிறது.அல்லது அந்த தோல்விகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கூட இல்லை.

தாமதிக்கப்பட்ட ஒவ்வொரு வெற்றியும் தோல்வியாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. பரவாயில்லை.

“இனி வாழ்வே இருண்டுவிட்டது. அவ்வளவுதான்” என்று யாராவது சொன்னால் ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுங்கள். ஆனால் இரும்பு இதயத்தோடு. ஏனெனில் இங்கு தேர்வின் தோல்விக்கும் வாழ்வின் வெற்றிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நீங்கள் தோல்வியை சரியாக எதிர்கொள்ளும் பட்சத்தில்.

குற்றவுணர்வில் குறுகிப் போய்விடாதீர்கள். வாழ்வில் இஃது ஒரு நிகழ்வு. விழுந்தால் எழத்தான் வேண்டுமேயன்றி அழ அல்ல.

உலகம் எவ்வளவு பெரியது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கிறது. ஒரு மெடிக்கல்ஷாப் ஓனரின் உலகம் அந்த 20க்கு 20 கடையளவுதான்.ஆனால் அங்கு வந்துபோகும் வாடிக்கையாளர்களின் உலகத்தின் அளவு மொத்தமும் அவரின் உலக அளவில் அடங்கும்.

உங்களைப் பொருத்தவரை இன்று இந்த தோல்வி மட்டுமே கண்முன் இருக்கும் உலகம்.உண்மை அதுவல்ல. அதன் பின் இருக்கும் மிகப் பெரிய வெற்றிகள் தான் உண்மையான உலகம். அதைப் பார்ப்பதற்கான பாஸ்போர்ட்தான்/பயணச்சீட்டுதான் இந்த தோல்வி என்று கூறப்படும் தாமதிக்கப் பட்ட வெற்றி.

எனக்குத் தெரிஞ்ச ஒருவர்... +2 ல சுமாரான மார்க் வாங்குனதால பி.இ. சேர முடியாம பிஎஸ்சி சேந்தாரு. அத முடிச்சுட்டு ஐஐஎம் இல் போய் எம்பிஏ படிச்சாரு. +2 வுல சுமார் மார்க் வாங்குன அவரு சில வருட இடைவெளியில் தன் முயற்சியால அகமதாபாத் ஐஐஎம்லேயே சீட் வாங்குனாரு.அவரோட என்ட்ரன்ஸ் எழுதுன எத்தினியோ பி.இ. படிச்சவுங்களுக்கு ஐஐஎம் இல் இடம் கிடைக்கல. வாழ்க்கை யாருக்கு எப்ப மாறும்னு சொல்ல முடியாது. ஆக தொடர் முயற்சி மட்டுமே பலன் தரும்.

இன்னும் நீங்கள் பெரிதும் விரும்பும் திரைத்துறையில் எத்தனை வித பாடங்கள்.. தோல்விகள்.. அதிலிருந்து மீண்ட வெற்றிகள்..

முன்னனி இதழ் ஒன்று விஜயின் முகத்தைப் பற்றி அப்பட்டமாக கேலிசெய்து எழுதியது. இன்று அதே இதழ் மாதமிருமுறை விஜயின் அட்டைப் படம் தாங்கி வருகிறது.விஜயின் விடா முயற்சியும் உழைப்பும் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்..

அஜித்.. எத்தனை வித தோல்விகள். முதல் பட முடிவிலேயே முதுகுத் தண்டில் ஆப்பரேஷன்கள். இனி அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நிமிர்ந்தெழுந்தவர் அஜித். இன்று முக்கிய நாயகர்களில் அவரும் ஒருவர். இடர்களை இடறியதால்தான் இது சாத்தியமாயிற்று.

இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ தோல்விகள் வெற்றிகளாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழிபெயர்க்க வேண்டியவர்கள் நீங்கள் தான்.

இது முடிவல்ல.. இறுதியும் அல்ல. ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடம். ஆம்.. இனி எல்லாம் வெற்றி மட்டுமே என்ற உறுதியுடன் மீண்டும் உழைக்க வேண்டிய தருணம்.

ஏதோ ஒரு காரணத்தினால் இப்படியான நிகழ்வு. மிக நன்றாகப் படித்திருந்தும் தொண்டைவரை இருந்த வார்த்தைகளை பேனாவின் முனையில் இறக்கமுடியாமல் போயிருக்கக்கூடும். வீட்டின் அன்றாடப் பிரச்சனைகளில் தொலைந்து போயிருக்கக்கூடும். தேர்வன்று மட்டுமே படிக்கவேண்டிய கடைசி நிமிட ஞானம் கைகொடுக்காமல் போயிருக்கக் கூடும்.. எதுவாயினும்..இன்று நடந்த நிகழ்வை ஒரு சிறு தோள்குலுக்கலில் தட்டி விடுங்கள்.ஏனெனில் இந்த மிகப் பெரிய உலகம் உங்களின் விரல் சொடுக்கிற்காக காத்திருக்கிறது.

மீண்டும் உழையுங்கள்.. மீண்டு வாருங்கள்.. நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது நீங்கள்.காத்திருக்கிறோம்.

இது முடிவு என்று முடிவெடுத்துவிடாதீர்கள். ஆரம்பம்...

முயற்சியை விடாதீர்கள்.. விடாமுயற்சிதான் மனவலிகளை போக்கும் வழி.

*******

இது வரை நீங்கள் படித்த பதிவை எழுதியவர் நர்சிம். காபிரைட் , டீரைட் அவுருதே. நாலு பேர் படிக்கணும், ஒரு காலத்திலே அப்படிங்கற நல்லெண்ணம் தான். :-)

*******

நர்சிம்

நீங்கள் எந்த வருடத்திய ஐ.ஐ.எம் பேட்ச்? எந்த ஊர்?

மிக நல்ல பதிவு.

ப்ளாகர்கள் ஒன்று கூடி ப்ளஸ் ௨ தேறிய மாணவர்கட்க்கு (அதுவும், ஏழை) உதவ ஒரு த்ரெட் போடுங்க. கரக்டான கோர்ஸ் போன்றவை. எங்கே டொனேசன் குறைவு அப்படின்னு... இப்படிபல..

No comments:

Post a Comment