Wednesday, February 16, 2011

பச்சை தீவு

கச்சத்தீவைக் கை கழுவியதால்...?

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் "டார்குயின்' எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், "விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்'' என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை... இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்'' எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: ""இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.''

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான "டின்பிகா' எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. "டின்பிகா' ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான "உமிரி' போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு - குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், "ராடார்' போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள "பால்மஸ் மியான்ஜஸ்' எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20070510104425&Title=Editorial+Page&lTitle=ர

தினமணிக்கு நன்றி.

1 comment:

  1. Found on Twitter - தமிழக மீனவர்களுக்காக பதிவர்களும் டிவிட்டர்களும் முன்னெடுத்த போராட்டத்தின் முக்கிய அம்சம் எல்லை தாண்டுவதற்காக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்ப‌டுவதும், அவர்கள் மீதான வன்முறைகள் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே. மேலும் இதற்காக மீடியா மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை பொறுவதுமே ஆகும். இந்த போராட்டத்தில் யாரும் எல்லை தாண்டுவதை ஆதரிக்கவில்லை.அப்படி எல்லை தாண்டினால் இலங்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தினோம். இத்தகைய சூழ்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி 106 மீனவர்களும் நேற்று 22 மீனவர்களும் எல்லை தாண்டிய குற்றத்திற்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இது இலங்கை அரசு சட்டப்படி எடுத்த நடவடிக்கை. நாம் கேட்டிருந்ததும் இதை தான். இப்பொழுது இதையும் தவறு என்று கண்டித்து #tnfisherman tag-கோடு டிவிட்டுவது நியாமற்ற செயல்.
    சமீபத்தில் இந்திய-இலங்கை மீனவர்கள் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் சாரம் - இந்த ஆண்டு மட்டும் டிராலர்கள் பயன்படுத்தலாம் அதுவும் இலங்கை கடற்கரைக்கு ஐந்து மைல்களுக்கு [ கடல் மைல்கள்]அப்பால் தான் , அடுத்த ஆண்டு முதல் முற்றிலுமாக டிராலர் பயன்படுத்தக்கூடாது என்பது. இதில் இந்திய மீனவர்கள் கையெப்பமிட்டு ஒப்புக்கொண்டுள்ளனார். இப்பொழுது கைது செய்யப்பட்டது இந்த ஒப்பந்தத்தை மீறியதால்.அதாவது இலங்கை கடற்கரைக்கு ஐந்து மைல்களுக்குள் டிராலர்கள் பயன்படுத்தியதால். இந்த கைது தவறு என்று நாம் சொல்வது எந்த விதத்தில் சரி. இது போன்ற செயல்களால் இதுவரை நம் செய்த #tnfisherman போராட்டமும் அடிப்படை நியாமற்றது என்ற தோற்றத்தை தந்து விடும்.
    இலங்கை எல்லைவரை சென்று டிராலர் பயன்படுத்துவோம் ஆனால் யாரும் எங்களை கேள்வி கேட்க‌க்கூடாது என்பது அடாவடிதனம் அன்றி வேறெதுவுமில்லை. கொல்லப்பட்ட மீனவர்களுக்காக‌ தொடர்ந்து போராடுவோம். இதில் தொடர்புடைய இலங்கை கடற்படையினர் தண்டிக்கப்படும்வரை போராடுவோம். ஆனால் கைது நடவடிக்கைள் போன்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை கண்டித்து நம்மை நாமே திசை திருப்பிக்கொள்ள வேண்டாம்.

    ReplyDelete