Monday, February 9, 2009

அவுட்சோர்சிங்

அவுட்சோர்சிங் இனிவரும் காலத்தில் தவிர்க்க முடியாததாகவே ஆகிவிடும் என்பது உறுதியாகிக் கொண்டிருக்கிறது.

இங்கே மாற்றம், படிப்படியாகப் பலதுறைகளிலும் வந்து கொண்டு தான் இருக்கிறது. வெளியே அவ்வளவாகத் தெரியவில்லை.

முன்னால் எதிர்த்துப் பார்த்த தொழிற்சங்கங்கள் எல்லாம், இப்போது ஏதோ ஒரு சின்ன சலுகையைப் பெற்றுக் கொண்டு, சத்தம் அதிகம் போடாமல் ஒத்துக் கொள்கிறார்கள்.

அவுட்சோர்சிங்கில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

முதலாவதாக,ஒரு விஷயத்தில் தேவைப்படும் தொழில் நுட்பத்திற்காக, அல்லது ஆட்களைப் பயிற்றுவிக்கிற, அவர்களை மேற்பார்வை பார்க்கிற தொல்லையெல்லாம் கிடையாது.

அடுத்ததாக, ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடித்தாகவேண்டும் என்பது, அனேகமாக எந்த ஒரு நிறுவனத்திலும், தானுடைய ஊழியர்களை வைத்து நடப்பதே இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, நிறுவனங்கள், வேலையைத் தகுதியுள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு, முக்கியமான வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு, இந்த முறை பெரிதும் கை கொடுக்கிறது.

கடைசியாக, செலவு கம்மியாக ஆகிறது.

இப்படித் தேவைப்படுகிற சேவைகளை, அவுட்சோர்சிங் முறையில் தகுதியுள்ளவர்களிடமிருந்து பெறுவதில்,புதிய வாய்ப்புக்கள் நிறைய உருவாகின்றன. போட்டிச் சந்தையில், திறமைக்கு அதிக முன்னுரிமை அளித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இங்கே அரசு, அரசு நிர்வாகம், அரசு ஊழியர்கள் என்று பார்த்தால், வெறும் வேலை, சம்பளம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், சேர்த்துப் பார்க்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

முதலில், அரசு இயந்திரம், அதன் ஜனங்களுக்குப் புரியக் கூடியதாக, சிநேகிதபூர்வமாக இருக்க வேண்டும். இங்கே நாம் பழைய பிரிட்டிஷ் முறையையே வைத்துக் கொண்டிருப்பதில், வெள்ளைத் துறைக்குப் பதிலாக வேறொரு உள்ளூர்த் துறைக்கு கைகட்டி அடிமை மாதிரி நடத்தப் படுகிற தன்மை தான் இருக்கிறது.

ஒரு சின்ன விஷயம், அதை முடிவெடுப்பதில் கூட ஏகப்பட்ட ஏறுவரிசை, இறங்குவரிசையில் கோப்புக்கள் தயாராகிக் கடைசியில், முடிவு மட்டும் எடுக்கப் படாமல் இருக்கும் ஒரு முட்டாள்தனமான அரசு நிர்வாகத்தைத் தான் நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.

நிலவரி, அதன் வருமானம் தான் பிரதானம் என்ற நிலையில் ரெவின்யூ டிபார்ட்மென்ட் என்ற ஒன்று ப்ரிடிஷ்காரர்களால் கொண்டுவரப்பட்டது. ஐ சி எஸ் தேர்வில் வெற்றி பெற, ஒரு மாவட்டத்தைப் பற்றிய அத்தனை விவரங்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இருந்தது. இன்றோ?

ஆட்டுக்கு தாடி எதற்கு? மாநிலத்துக்கு கவர்னர் எதற்கு என்றெல்லாம் கேட்டவர்கள், முக்கியமாகக் கேட்டிருக்க வேண்டிய கேள்வி மாவட்ட ஆட்சித் தலைவர் என்று ஒருவர் எதற்கு?

நிர்வாகத்தின் பலவகையான அடுக்குமுறைகள் எப்போதுமே குழப்பத்தைத் தவிர வேறோன்றையுமே சாதித்ததில்லை.

அரசு, அரசு நடைமுறைகளைப் பொறுத்தவரை, முதலில் வேண்டியது நிர்வாகத்தில் இருக்கும் கழுதை ரேஸ் முறையை ஒழித்து, சுருக்கமான, நேரிடையான அதிகார அமைப்பு.

இப்போதிருக்கும் நடைமுறையில், ஒரு அரசு ஊழியர் நேர்மையாகப் பணியாற்றுகிறார் என்று கற்பனைக்கு வைத்துக் கொண்டாலுமே கூட, அதனால் ஜனங்களுக்கு எந்தவிதமான பயனும் இருக்காது.

அடுத்தது, மற்ற வணிக நிறுவனங்களுக்கும் அரசுக்கும் முக்கியமான வேறுபாடு, மற்ற நிறுவனங்கள், வணிக நிறுவனமாகவோ, தர்ம ஸ்தாபனமாகவோ இருக்க முடியும்.

அரசு என்பது ஒரு குறைந்தபட்ச வேலைகளை, பொது நலனுக்காக நிர்வகிக்கும் சேவை அமைப்பாக மட்டுமே, ஜனநாயகத்தில் நீடிக்க முடியும்.

வரிப்பணத்தை வீணடிக்கவோ, விரயம் செய்யவோ எவருக்கும் உரிமையில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால், அரசு ஊழியர்களுடைய சம்பள செலவினங்களுக்கே, வரி வருவாயில் அறுபது சதவீதத்துக்கு மேல் செலவாகி விடுகிறது. எதற்காக வரி வசூலிக்கப் படுகிறதோ அந்தக் காரியம் நடப்பதே இல்லை.

இந்த விஷயங்களையும் சேர்த்துக் கொண்டு, இன்னும் பேச வேண்டியவை இருக்கின்றன, இந்த விஷயத்தில் பின்னூட்டமாகவோ, அல்லது தங்களுடைய கருத்தாகவோ தெரிவித்தால், அது பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment